திருவள்ளூருடன் இணைய எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
திருவள்ளூர், : திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈக்காடு ஊராட்சி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருவள்ளூர் நகராட்சியுடன், ஈக்காடு, காக்களூர், வெங்கத்துார் உள்ளிட்டஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்படுவதாகதமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈக்காடு ஊராட்சியினர், கடந்த 4ம் தேதி, திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வருவாய் மற்றும் காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து, கலெக்டரிடம் தெரிவிப்பதாக தெரிவித்தனர்.இந்நிலையில், ஈக்காடுஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ஐந்து பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுப்பி வைத்தனர்.கலெக்டரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஈக்காடு ஊராட்சியில் வசிப்போரில் பெரும்பாலானோர் பொருளாதாரரீதியாக பின் தங்கி உள்ளனர். நுாறு நாள் வேலை திட்டத்தை நம்பிஉள்ளனர்.இந்த ஊராட்சியை திருவள்ளூருடன் இணைத்தால், இந்த வேலை வாய்ப்பு கிடைக்காமல், மக்கள் சிரமப்பட வேண்டியதிருக்கும்.எனவே, எங்கள் ஊராட்சியை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டில்...
பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமச்சந்திராபுரம் ஊராட்சியை,பேரூராட்சியுடன் இணைக்க அரசுஅறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமவாசிகள் நேற்று பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.பள்ளிப்பட்டு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.