புதுவாயல் - பழவேற்காடு சாலை விரிவாக்க பணிகள் இறுதி கட்டம்
பொன்னேரி:புதுவாயல் - பழவேற்காடு சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலைக்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுவாயல் பகுதியில் இருந்து, ஏலியம்பேடு, குண்ணம்மஞ்சேரி, பெரியகாவணம், சின்னகாவணம் வழியாக பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலை வரை, சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாயில், 4.2 கி.மீ. தொலைவிற்கு, மைய தடுப்புகளுடன், 100அடி அகலத்தில் மேற்கண்ட சாலை அமைகிறது. இதில் புதுவாயல் - குண்ணம்மஞ்சேரி வரையிலான பணிகள் முடிந்து உள்ளன. பெரியகாவணம் - சின்னகாவணம் இடையேயான பணிகளில் பெரும்பாலானவை நிறைவு பெற்று உள்ளன. சின்னகாவணம் பகுதியில், சாலை அமையும் இடத்தில் இருந்த விநாயகர் கோவிலை அகற்றுவதில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அங்கு பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த, 5ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன், விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுவாயல்- பழவேற்காடு சாலை பணிகள் இறுதிகட்டத்தை அடைந்து உள்ளதால், அடுத்த 15நாட்களில் முழுமையாக முடிந்து, மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.