ரயில்வே மேம்பால பணி விரைந்து முடிக்க உத்தரவு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 152 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் நான்கு ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வேண்டுமென, உத்தரவிட்டார். சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், 108.1 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று ரயில்வே மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த மூன்று ரயில்வே மேம்பால பணிகளை நேற்று கலெக்டர் பிரதாப், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டார். பின், சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில்வே மார்க்கத்தில், மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம் பாக்கம் பகுதியில் கடவுப்பாதை எண் 16ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 44.5 கோடி ரூபாயில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தார். பின், திருவள்ளூர் மாவட்டத்தில், 152 கோடி ரூபாயில் நடந்து வரும் நான்கு ரயில்வே மேம்பால பணிகளையும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதாப் உத்தவிட்டார்.