முன்பதிவில்லா டிக்கெட் மையம் அமைக்க ரயில் பயணியர் சங்கம் மனு
புட்லுார்: புட்லுார் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா கணினி டிக்கெட் வழங்கும் மையம் அமைக்க கோரி, தெற்கு ரயில்வே துறைக்கு, ரயில் பயணியர் சங்கம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் அடுத்த புட்லுார் ரயில் நிலையம் அருகே காக்களூர் தொழிற்பேட்டை, அங்காள பரமேஸ்வரி கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர், தினமும் வேலை மற்றும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு, தனியார் மூலம் டிக்கெட் வழங்கப் படுகிறது. முன்னரே அச்சடிக்கப்பட்ட விலையில், சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. தாம்பரம், கிண்டி, மாம்பலம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, நேரடி மற்றும் 'ரிட்டர்ன்' டிக்கெட் வழங்குவதில்லை. மேலும், விரைவு ரயில்களில் முன்பதிவில்லா டிக்கெட்டும் கிடைப்பதில்லை. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது, வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும் நிலையில், புட்லுாரில் இதற்கான டிக்கெட் வழங்கப்படுவதில்லை. எனவே, முன்பதிவில்லா கணினி டிக்கெட் வழங்கும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.