உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் நிலைய பணி மந்தம் நலக்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

ரயில் நிலைய பணி மந்தம் நலக்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

திருவள்ளூர்,திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின், 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி மந்தகதியில் நடப்பதாக, ரயில் பயணியர் நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி குற்றஞ்சாட்டினார். சென்னை -- அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஆறு நடைமேடை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மத்திய அரசின், 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையத்தை மேம்படுத்தி, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க, 28.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் பணிகள் துவங்கியது. இந்நிலையில், பணி துவங்கி இரு ஆண்டுகளாகியும், ஆமை வேகத்தில் நடந்து வருவதாக, ரயில்வே துறைக்கு பல்வேறு புகார் வந்தது. நேற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளடக்கிய மத்திய அரசின் ரயில் பயணியர் நலக்குழுவின் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். பின், ரயில் நிலையம் முன் அமைக்கப்பட்டிருந்த முன்பதிவுக்கான கட்டடத்தை இடித்து, மத்திய அரசின் பணத்தை வீணடித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். முன்பதிவு டிக்கெட் கவுன்டரை இடித்துவிட்டு, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக டெண்டர் விடப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஒன்று மற்றும் மூன்றாவது நடைமேடைகளை இணைக்கும் சுரங்கப்பாதை தரமற்று இருப்பதாகவும், மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் வடிவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பினார். இது குறித்து, ரயில்வே துறை அமைச்சருக்கு தகவல் அளித்து, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ