கிடப்பில் மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணி
மீஞ்சூர்:மீஞ்சூர் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் காட்டூர், நெய்தவாயல், வாயலுார், திருவெள்ளவாயல், புதுகுப்பம் உள்ளிட்ட, 80 கிராமங்கள் உள்ளன. ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், மீஞ்சூர் பஜார் பகுதி அமைந்து உள்ளது. மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக, மீஞ்சூர் பஜார் பகுதிக்கு வந்து செல்ல, பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் அரியன்வாயல் பகுதியில் இறங்கி, பின், அங்குள்ள ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.அதேபோல, இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், மீஞ்சூர் ரயில்வே கேட் வழியாக பயணிக்கின்றனர். ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.அங்குள்ள கேட் இடுக்குகளில் புகுந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். கிராம மக்களின் கோரிக்கையின் பயனாக, 2019ல், அரியன்வாயல் - மீஞ்சூர் பஜார் பகுதி இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்காக கான்கிரீட் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. அடுத்தகட்ட பணிகள் ஏதும் நடைபெறாமல், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், கடந்த மாதம், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மீஞ்சூர் ரயில்வே கேட் இடுக்குகளில் இருசக்கர வாகனங்கள் நுழைந்து செல்வதை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.இதனால் தற்போது, மற்ற வாகனங்களுடன் இருசக்கர வாகனங்களும் ரயில்வே கேட்டில் நீண்டநேரம் காத்து கிடக்கின்றன. இதனால் கிராமவாசிகள் கூடுதல் சிரமங்களுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக, நேற்று, மீஞ்சூரில் அனைத்து கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.கூட்டத்தில், ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனங்கள் நீண்ட காத்திருப்பதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், பொதுமக்கள் ரயில் தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடப்பதை தவிர்க்கவும், சுரங்கப்பாதை அமைப்பதே தீர்வு.அதற்காக, தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., ஆகியோருடன் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது, அனைத்து கட்சி சார்பில் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.