உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி வனப்பகுதி காட்டாறுகளில்...வீணாகும் மழைநீர்!: தடுப்பணைகளில் தேக்கினால் பலன்

பூண்டி வனப்பகுதி காட்டாறுகளில்...வீணாகும் மழைநீர்!: தடுப்பணைகளில் தேக்கினால் பலன்

திருவள்ளூர்:வடகிழக்கு பருவமழையால் பூண்டி மலையில் உள்ள காட்டாறுகளில் ஓடிய வெள்ளம், தடுப்பணைகளை நிரப்பி வழிகிறது. இவற்றை ஆழப்படுத்தினால், மழைக்காலத்தில் வழிந்தோடும் தண்ணீரை சேமிக்க முடியும். இதன் வாயிலாக, விவசாய பயன்பாட்டிற்கும், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் மழைநீரை கொண்டு வரலாம். இதற்கு பூண்டி வனத்துறை முயற்சியெடுக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, ஆந்திர - தமிழக எல்லையில் மலை பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. வனத்துறை பராமரிப்பில், காப்புக் காடாக அறிவிக்கப்பட்டுள்ள இங்கு, மான், நரி, ஓநாய், குரங்கு போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. வன விலங்குகள் குடிநீர் அருந்துவதற்காக, வனத்துறை சார்பில், மலைகளில் பெய்யும் மழைநீர் வடிந்தோடும் ஓடைகளின் குறுக்கே, தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.பூண்டி ஒன்றியம், பிளேஸ்பாளையம், அல்லிகுழி, திம்மபூபாலபுரம், பப்பிரெட்டிகண்டிகை, கூனிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.

உபரி நீர்

இந்த தடுப்பணைகள் அனைத்தும் மழைக்காலத்தில் நிரம்பி வழியும். கோடை காலத்தில் நீரின்றி வறண்டு விடும். இந்த தடுப்பணை அனைத்தும், உயரம் குறைவாக கட்டப்பட்டு உள்ளதே இதற்கு காரணம்.இதனால், கனமழை பெய்தாலும், சிறிய அளவிலேயே தண்ணீர் தேங்கி, உபரி நீர் வழிந்தோடி வீணாகிறது.கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கன மழையால், தற்போது பூண்டி காப்புக்காட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகின்றன.இதனால், தண்ணீர் விரைவில் வெளியேறி, கோடையில் தண்ணீரின்றி வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.உயரம் குறைவாக உள்ள இந்த தடுப்பணைகளை ஆழப்படுத்தி, ஓடைகளையும் அகலப்படுத்தினால், மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை கூடுதலாக சேகரிக்க முடியும். இதனால், தடுப்பணைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களின் ஏரி, குளங்கள் நிரம்பும். விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படாது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பூண்டி மலை பகுதி ஆந்திர மாநிலம் கனகம்மாசத்திரத்தில் துவங்கி, சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம், வழியாக நாகலாபுரம் வரை பரந்து, விரிந்து உள்ளது. மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து உள்ளன.இவற்றை தவிர, ஆங்காங்கே சிறு, சிறு குன்றுகளும் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் கனமழையால், மலைகளில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.வனத்துறை, பொதுப்பணி துறை-நீர் வளம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, பூண்டி வனப்பகுதிகளை ஆய்வு செய்து, தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆழ்துளை கிணறு

திருவள்ளூர் வனத்துறையினர் கூறியதாவது:பூண்டி காப்புக்காடு பகுதியில், வன விலங்குகள் தண்ணீர் அருந்த தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அணையில் சேகரமாகும் தண்ணீரை, அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தோர், விவசாய தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், ஆங்காங்கே, ஓடையை ஒட்டி, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு அனுமதியளித்து, நிதி ஒதுக்கீடு செய்தால் தான், தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கரையை உயர்த்த இயலும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வழிகாட்டும் ஆந்திரா: பின்பற்றுமா தமிழகம்?

அண்டை மாநிலமான ஆந்திராவில், மலைகள், காட்டாறு, ஓடைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து தடுப்பணைகள் கட்டி சேகரித்து வருகிறது. ஆந்திரா சித்துார் மாவட்டம், கிருஷ்ணாபுரம்-அம்மபள்ளி கிராமங்களுக்கு இடையே, இரு மலைகளின் குறுக்கே, 1975ல், 4.37 கோடி ரூபாய் மதிப்பில், அணை கட்டப்பட்டது. இங்கு, 17.22 கோடி கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இந்த அணை வாயிலாக, 17 கிராமங்களில், 6,125 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த அணையில் இருந்து தான் கொசஸ்தலை ஆறு உற்பத்தியாகி தமிழகத்திற்கு வருகிறது.சத்தியவேடு அருகே, பீரகுப்பம் என்ற கிராமத்தில், 7 கோடி ரூபாய் செலவில், கடந்த 2007ல் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. சுற்றிலும் உள்ள மூன்று மலைகளுக்கு நடுவில் இத் தடுப்பணை அமைந்துள்ளது. மழைக் காலத்தில் பெய்யும் தண்ணீர், மூன்று மலைகளில் இருந்தும் ஓடி வந்து இந்த அணையில் தேங்கும். இதில், 900 மில்லியன் கன அடி வரை இங்கு தண்ணீரை தேக்கிவைக்க முடியும். வரதய்யபாளையம் நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமிக்க, கடந்த 2012ம் ஆண்டு, 900 மில்லியன் கன அடி தண்ணீரை சேகரிக்கும் வகையில், நீர்தேக்கம் கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம், 2,900 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆந்திர மாநில மலைகளில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேகரித்து வரும் நிலையில், தமிழக அரசும், இயற்கை தந்த மலைகளில் தடுப்பணை கட்டினால், வீணாகும் தண்ணீரை சேகரித்து, தன்னிறைவு பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ