மழை நின்று 2 நாட்களாகியும் கண்ணன் நகரில் தேங்கி நிற்கும் மழைநீர்
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சி கண்ணன்நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, ஊராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கவில்லை.இந்நிலையில், மூன்று நாட்களாக பெய்த கனமழையால் கண்ணன் நகர் முழுதும் மழைநீர் சூழ்ந்துள்ளன. மழைநீர் வெளியே செல்வதற்கு வழியில்லாததால் மழை நின்று நேற்றுடன் இரு நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை.இதனால் அப்பகுதியினர் தங்கள் அத்தியாவசிய பணிகள் காரணமாக மழைநீரில் இறங்கி சென்று வருகின்றனர்.ஊராட்சி நிர்வாகம் இதுவரை தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, வடிகால்வாய் அமைத்து தரவேண்டும் என கண்ணன்நகர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.