திருத்தணி அரசு பஸ் நேர காப்பாளர் அறையில் தேங்கி நிற்கும் மழைநீர்
திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்தில், அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், நேர காப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு சென்னை, திருவள்ளூர், வேலுார், காஞ்சிபுரம், திருப்பதி, செங்கல்பட்டு உட்ட, 10க்கும் மேற்பட்ட பணிமனைகளில் இருந்து பேருந்துகள் வந்து செல்கின்றன.இங்கு, அரசு பேருந்து நடத்துனர்கள், பேருந்து வரும் நேரம், வெளியே செல்லும் நேரம் குறித்தும், பயணிகளுக்கு பேருந்து புறப்படும் நேரம் குறித்தும் அறிவிப்பதற்கு நேர காப்பாளர் அலுவலகம் ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. இங்கு, அதிகாலை 4:00 மணி முதல், இரவு 10:30 மணி வரை அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர் அமர்ந்து பேருந்துகள் நேரம் குறிப்பிட்டு அனுப்பி வைப்பர்.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், பேருந்து நேர காப்பாளர் அலுவலகத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளன.மழை நின்று இரு நாட்கள் ஆகியும் நேர காப்பாளர் அறையில், மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஊழியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, நகராட்சி நிர்வாகம், நேர காப்பாளர் அறையில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.