நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுக ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா சின்னமுடப்பள்ளி அருந்ததி காலனியில், 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தின் நடுவில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர், ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம், பள்ளிப்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம், அப்பகுதிவாசிகள் பலமுறை மனு அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.இதனால் ஆத்திரமடைந்த சின்னமுடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.பின், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்த அவர்கள், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, நேர்முக உதவியாளர் உறுதி அளித்தார். அதன்பின், அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.