மழைக்கு முன் மின் வழித்தடங்களை சீரமைக்கும் பணி...அவசியம்: சிறு மழை காற்றடித்தாலே இரவில் மின்சாரம் துண்டிப்பு
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்காலம் துவங்கும் முன்பே, சிறு மழை பெய்தாலும், காற்றடித்தாலும் மின்கம்பிகள் அறுந்து விடுவதால், இரவு நேரத்தில் அடிக்கடி மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்குள், அனைத்து மின் வழித்தடங்களையும் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மின்பகிர்மான வட்டம், கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர், திருத்தணி மற்றும் திருமழிசை ஆகிய செயற்பொறியாளர் அலுவலகங்கள், இந்த வட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.மாவட்டத்தில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு, மின்சாரம் வழங்க, 42 துணைமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1.30 லட்சம் மின்கம்பம்
ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர், திருவள்ளூர் மாவட்டம் அலமாதி ஆகிய இடங்களில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.அங்கிருந்து, துணைமின் நிலையங்கள் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு, பின் வீடுகள், விவசாய நிலம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, மாவட்டம் முழுதும், 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னரே, திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது. மாவட்டம் முழுதும், மின்கம்பிகள் செல்லும் வழித்தடம் அருகே ஏராளமான மரங்கள் அமைந்துள்ளன.லேசாக காற்றடித்தாலும், மழை பெய்தாலும் மரக்கிளைகள் உடைந்து விழுவதால், மின்கம்பிகள் அறுந்து விடுகின்றன. அவற்றை சீர்படுத்துவதில், ஊழியர்கள் காலதாமதம் செய்வதால், மணிக்கணக்கில் மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது.திருவள்ளூர் நகரில், சில நாட்களுக்கு முன் உயரழுத்த மின்சாரம் வந்ததால், மின்கம்பிகளில் உள்ள இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், கடந்த 22ம் தேதி நள்ளிரவு வரை, நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம்துண்டிக்கப்பட்டது. மறுநாள், மரக்கிளை உடைந்து விழுந்ததாலும், மின்சாரம் இரவில் துண்டிக்கப்பட்டது.திருவாலங்காடு, திருத்தணி, பூண்டி, கடம்பத்துார் உள்ளிட்ட ஒன்றியங்களில் அதிகளவில் கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில், ஒரு மாதமாகவே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் அமைத்து, 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அனைத்து மின்கம்பிகளும் பழுதடைந்து, அவ்வப்போது அறுந்து விழுகின்றன. முன்னெச்சரிக்கை
பராமரிப்பின் போது, அவற்றில் 'ஒட்டு' போட்டு இணைத்து விடுகின்றனர்.இவ்வாறு ஒட்டுப் போடப்படும் இடத்தில் அடிக்கடி ஒயர் துண்டிப்புக்குள்ளாகி வருவதே மின் தடைக்கு பிரதான காரணம்.மேலும், மாவட்டத்தில் மின்மாற்றிகள் அமைத்து பல ஆண்டுகளாகி விட்டதால், சேதமடைந்து உள்ளன. பருவமழையின் போது, மின் வினியோகம் சீராக வழங்க வேண்டும் என, கலெக்டர் மின்வாரியத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்.ஆனால், அத்துறையினரோ, மழைக்காலத்திற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.எனவே, இனியாவதுஅதிகாரிகள், பருவமழைக்கு முன் தடையற்ற, சீரான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஊழியர்கள் பற்றாக்குறை
திருவள்ளூர் மின்வாரிய அலுவலர் கூறியதாவது:திருவள்ளூர் மின் பகிர்மான வட்டத்தில், 'கேங்மேன், லைன்மேன்' உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் இடங்கள் காலியாக உள்ளன. புதிதாக யாரும் நியமிக்கப்படாததால், மின் நுகர்வோர் அளிக்கும் புகாரை களைவதில் சிரமமாக உள்ளது.மேலும், மின் தடை குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, அதற்குரிய பணியாளர்களை ஒன்று சேர்ப்பதற்கே, இரண்டு மணி நேரமாகிறது. அதன்பின், மின் பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே மின் தடை நீங்கி, மின்சாரம் மீண்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.