திருவாலங்காடு அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
திருவாலங்காடு:திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளி 1951ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக துவங்கி 1980ம் ஆண்டு மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளி துவங்கப்பட்ட ஆண்டு முதல் இதுவரை அரசு சார்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இப்பள்ளியில் தற்போது முகப்பு பகுதியில் மட்டும் 400 மீட்டர் சுற்றுசுவர் அமைக்கப்பட்டு உள்ளது. அரசிடம் 70 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் தனிநபர்கள் நடமாட்டம் உள்ளதுடன், சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் மது அருந்துவதும், கட்டடத்தை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி கட்டடத்திற்கு பின்புறம் வரும் ரோமியோக்கள் மாணவியருக்கு தொல்லை தருகின்றனர். மாணவியர் கழிப்பறைக்கு செல்லும் பகுதியில் வெளியாட்கள் நின்று கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை தருகின்றனர். இங்கு நிற்பவர்கள் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர்.இதை தடுக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பது மட்டுமே தீர்வு. மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' 50 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 120 மீட்டருக்கு நிதி கோரியுள்ளோம்' என்றார்.