பெரியபாளையம் பஸ் நிலையத்தில் நேரக்காப்பாளர் அறை மாற்ற கோரிக்கை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பெரியபாளையம் ஊராட்சி. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, பவானியம்மன் கோவில் அமைந்துள்ளது சிறப்பு.இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குவிந்து விடுகின்றனர்.இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு, தினமும் 80க்கும் மேற்பட்ட விழுப்புரம் கோட்டம் மற்றும் மாநகர பேருந்து சென்று வருகின்றன. இங்கிருந்து, கோயம்பேடு, செங்குன்றம், வள்ளலார்நகர், ஆவடி, அம்பத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து செல்கின்றன.பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்து நிர்வாகம் சார்பில், பேருந்துகள் வந்து செல்லும் நேரம் தெரிவிக்க பேருந்து நிலையம் முன் பக்கம் நேரக்காப்பாளர் அறை திறக்கப்பட்டது.இதன் வாயிலாக பேருந்துகள் வந்து செல்லும் நேரம் தெரிந்து பயணியர் பயனடைந்தனர். தற்போது, நேரக்காப்பாளர் அறை பேருந்து நிலைய பின்புறம் மாற்றி அமைக்கப்பட்டது.இதனால் பயணியர் நேரக் காப்பாளர் அறை இருப்பது தெரியாமல் உள்ளது. எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, பெரியபாளையம் பேருந்து நிலையம் முன் பக்கம், நேரக்காப்பாளர் அறையை மாற்ற வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.