மேலும் செய்திகள்
நகரிகாத்தான் தரைப்பாலம் அமைக்கும் பணி துவக்கம்
06-Jul-2025
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே, மந்தகதியில் நடந்து வரும் பாலப் பணிகளை, வடகிழக்கு பருவமழைக்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, மேட்டுத் தெரு செல்லும் சாலையின் குறுக்கே, ஏரிகளின் உபரிநீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் மீது தரைப்பாலம் இருந்தது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும், கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்குவதும், போக்குவரத்து பாதிப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. 2023ம் ஆண்டு கனமழையின் போது, தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மணல் மூட்டைகள் வைத்து சீரமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என, கும்மிடிப்பூண்டி பகுதிமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, உயர்மட்ட பாலமாக மாற்றி சாலையை புதுப்பிக்க, 1.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கிய நிலையில், பாலம் குறுகலாக இருப்பதால், அதை அகலப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் ஆய்வு மேற்கொண்டார். எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, 'கூடுதலாக 3 மீட்டர் அகலப்படுத்தப்படும்' என தெரிவித்தார். தற்போது, கட்டுமான பணிகள் மந்தமாக நடப்பதால், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
06-Jul-2025