செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் திட்டம் பூந்தமல்லிக்கு விரிவாக்க கோரிக்கை
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சிக்கு, செம்பரம்பாக்கம் ஏரி குடிநீரை விநியோகம் செய்யும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. பூந்தமல்லி நகராட்சியில், 21 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இப் பகுதிக்கு, உள்ளூர் நீர் ஆதாரம், ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முடிந்து, இந்தாண்டு இறுதியில் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது. மேலும், பூந்தமல்லியில் அனைத்து வசதிகளும் கிடைப்பதால், இங்கு குடியேறுவோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரி நீரை, பூந்தமல்லி நகராட்சி பகுதிகளுக்கும் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது: செம்பரம்பாக்கம் ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து. 530 மில்லியன் லிட்டர் குடிநீர், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகராட்சியின் அடையாறு, ஆலந்துார் உள்ளிட்ட மண்டலங்களுக்கும், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி ஆகிய பகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட திட்டமாக குடிநீர் விநியோகிக்க குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் வெள்ளோட்டம், அடுத்த சில நாட்களில் துவங்கவுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பூந்தமல்லி வழியாக சென்னைக்கு 17 ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்படும் நிலையில், பூந்தமல்லி நகராட்சிக்கு இதுவரை, செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்த வழியே செல்லும் குழாயில் இருந்து எளிதாக இணைப்பு கொடுத்து, பூந்தமல்லிக்கும் குடிநீர் வழங்க முடியும். அதற்கான பணி மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.