ஆரம்பாக்கம் ரயில் நிலைய வளாகம் துாய்மையாக பராமரிக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி,ஆரம்பாக்கம் ரயில் நிலைய வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரா, பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் பாதையில், தமிழகத்தின் கடைக்கோடி ரயில் நிலையமாக ஆரம்பாக்கம் உள்ளது.ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லுாரில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், வேலைக்கு செல்வோர் என, ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.ஆரம்பாக்கம் ரயில் நிலைய முகப்பு வளாகம் முழுதும் குப்பை குவியல், மாம்பழ கழிவுகள், மதுபாட்டில்கள், செடிகள் வளர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அதை கடந்து செல்லும் ரயில் பயணியர் முகம்சுளிக்க நேரிடுகிறது.எனவே, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ஆரம்பாக்கம் ரயில் நிலைய வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.