பென்னலுார்பேட்டை அரசு பள்ளி சுற்றுச்சுவரை உயர்த்த கோரிக்கை
ஊத்துக்கோட்டை:அரசு மேல்நிலைப் பள்ளியில், இரவு நேரங்களில் மர்மநபர்கள் உள்ளே புகுந்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்துவதால், சுற்றியுள்ள சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பூண்டி ஒன்றியத்தில் பென்னலுார்பேட்டை அமைந்துள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில், மர்மநபர்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து, கஞ்சா, மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காலையில் பள்ளி வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தி அடைகின்றனர். இங்குள்ள குடிநீர் குழாய் மற்றும் கழிப்பறைகளை சேதப்படுத்தி விடுகின்றனர். மேலும், வகுப்பறைகள் கட்டி, 15 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கூரை சேதமடைந்து உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், வகுப்பறை கட்டடத்தை சீரமைக்க வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளியின் சுற்றுச்சுவரின் உயரத்தை உயர்த்த வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.