அந்தேரியம்மன் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில் அந்தேரியம்மன் கோவில் உள்ளது. இரண்டரை ஏக்கர் பரப்பில் உள்ள இந்த குளத்தை ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு அகூர் கிராம மக்கள் இந்த குளத்து தண்ணீரை குடிநீராகவும், சமையல் செய்யவும் பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு குளம் உரிய பராமரிப்பு இல்லாததால், குளத்தில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் துணிகள் துவைக்கவும், கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பியிருந்தால் அகூர் கிராமம் மற்றும் காலனி பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்ப்பதுடன், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இந்நிலையில், கடந்த, 2011ல் 5 லட்சம் ரூபாயில் குளத்தை துார்வாரி சீரமைக்கப்பட்டது. அதன் பின் ஊராட்சி நிர்வாகம் குளத்தை பராமரிக்காததால் சிலர் குளத்தை ஆக்கிரமித்துள்ளனர்.மேலும் குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய் புதைந்தும் உள்ளதால் மழைநீர் மற்றும் ஏரி நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர குளத்தில் அதிகளவில் செடிகள் வளர்ந்தும் கரைகள் சேதம் அடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் அந்தேரியம்மன் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.