குடியிருப்பு பகுதியில் ஜல்லி சாலை திருமழிசை பகுதிவாசிகள் அவதி
திருவள்ளூர்,: திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணி மற்றும் குடிநீர் குழாய், கால்வாய் கட்டும் பணி பல இடங்களில் நடந்து வருகின்றன.இதனால் சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால் பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை மற்றும் அருகில் உள்ள ஜவகர் தெரு உட்பட பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளது.பேரூராட்சி அலுவலகம்செல்லும் சாலையே மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் குடியிருப்புவாசிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.பேரூராட்சி அலுவலகம்செல்லும் சாலையே மோசமாக உள்ளது பகுதி வாசிகளிடையே பேரூராட்சி நிர்வாகம் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சியில் சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருத்தணி நகராட்சி, அரக்கோணம் சாலையில் சுப்பிரமணியநகர் பகுதியில் ரயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு, 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வழியாக ஜெ.ஜெ.நகர், வள்ளிநகர் ஆகிய பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் நடந்து செல்கின்றனர்.இந்நிலையில், ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை மற்றும் சிமென்ட் சாலை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் தற்போது சாலை ஜல்லிகற்களாக மாறியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.ரயில்வே குடியிருப்புமக்கள் பலமுறை சாலையை சீரமைத்து தர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.