6 சதவீதம் சொத்து வரி உயர்வு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
திருவள்ளூர்:நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள், 2023ன் படி, அனைத்து பேரூராட்சிகளிலும், ஆண்டு மதிப்பில், 6 சதவீதம் உயர்வு செய்து, சொத்து வரி நிர்ணயம் செய்ய, கடந்த செப்., 5ம் தேதி உத்தரவிட்டது. இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்த, திருமழிசை பேரூராட்சி காலதாமதம் ஏற்படுத்தியதையடுத்து, தற்போது ஆன்லைனில் வரி வசூலிக்க தடை ஏற்பட்டது. இதையடுத்து, திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில், நேற்று வார்டு உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் நடந்தது. செயல் அலுவலர் ம.வெங்கடேஷ் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க., பேரூராட்சி தலைவர் ஜெ.மகாதேவன் தலைமை வகித்தார். இதில், அரசாணையில் தெரிவித்தபடி, வருடாந்திர மதிப்பில் 6 சதவீதம் உயர்வு நிர்ணயம் செய்வதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்பு விதிகள் - 2023, விதி எண் 268 -3ன் படி, நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்தாதவர்களுக்கு, ஒரு சதவீதம் மாதாந்திர வட்டி விதித்து, தொகை வசூலிக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதாவது, பேரூராட்சிகள் இயக்குனர் உத்தரவின்படி, முதல் அரையாண்டு தொகை செப்டம்பர் மற்றும் இரண்டாம் அரையாண்டு தொகையை மார்ச் மாதத்திற்குள்ளும் செலுத்தாதவர்களிடம், ஒரு சதவீதம் மாதாந்திர வட்டி விதித்து வசூலிக்க வேண்டுமென, தீர்மானம் நிறைவேற்றபட்டது.திருமழிசையில், 15 வார்டு உறுப்பினர்கள் இருந்தனர். தி.மு.க., பேரூராட்சி தலைவர் யு.வடிவேல் விபத்தில் இறந்ததால், தற்போது 14 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.இதில், ஐந்து அ.தி.மு.க., வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெரும்பான்மையான வார்டு உறுப்பினர்கள் ஆதரவுடன், சொத்து உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, செயல் அலுவலர் தெரிவித்தார்.