வருவாய் துறையினர் அலட்சியம்: வட்டார கல்வி அலுவலகத்திற்கு சிக்கல்
திருத்தணி : திருத்தணி பழைய தர்மராஜா கோவில் அருகே, வட்டார கல்வி அலுவலகம், 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் வாயிலாக திருத்தணி ஒன்றியத்தில், 98 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்காணித்தும், மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதுதவிர, மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலதிட்ட உதவிகளும் கொண்டு சேர்க்கும் பணியிலும் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணி பதிவேடுகளும் பராமரித்து வருகிறது.இந்நிலையில், கல்வி அலுவலகம் கட்டடம் பழுதடைந்ததால், இரண்டரை ஆண்டுக்கு முன் திருத்தணி வட்டார கல்வி அலுவலகம், திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆய்வக கட்டடத்தில் இயங்கி வருகிறது. கோரிக்கை
இதையடுத்து, திருத்தணி வட்டார கல்வி அலுவலர் சலபதி முயற்சியால், பழைய கல்வி அலுவலகம் இயங்கி வந்த, பாறை புறம்போக்கு நிலம், 10 சென்ட் நிலத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு கோரிக்கை வைத்தது. அதன்பேரில் கடந்தாண்டு, மேற்கண்ட நிலத்தை கல்வித்துறை பெயரில் பட்டா வழங்கப்பட்டன. ஆனாலும் வட்டார கல்வி அலுவலகம் கட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.இது குறித்து திருத்தணி வட்டார கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது:பழைய வட்டார கல்வி அலுவலகம் இயங்கும் இடத்தை, திருத்தணி வருவாய் துறையினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்யாமல், வெறும் கல்வித் துறை என்ற பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. கேள்விக்குறி
பொதுவாக, கல்வித்துறை என, பட்டாவில் உள்ளதால், புதிய கட்டடம் கட்டுவதற்கு போதிய நிதியுதவி வழங்குவது யார் என, கேள்விக்குறியாக உள்ளது.ஆகையால், திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் வெறும் கல்வித்துறை என்பதை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்று பட்டா மாற்றித்தர வேண்டும் என, பலமுறை வருவாய் துறை அதிகாரிகளிடம், கோரிக்கை கடிதம் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.இதனால் புதிய வட்டார கல்வி அலுவலகம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து வட்டார கல்வி அலுவலக இடத்தை பட்டா மாற்றம் செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.