கட்டுமான பொருட்களின் விலை உயர்வு: வீடு கட்டுவோர் தொழிலாளர்கள் பாதிப்பு
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டுவது சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஒரு மாதமாக செங்கல், கிராவல், ஜல்லிக் கற்கள், எம் - சாண்ட், சிமென்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.இதனால், கட்டுமான தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வருகின்றனர். தேவைகள் அதிகரிப்பு, போக்குவரத்து செலவு, மின்சாரம், தொழிலாளர் சம்பளம் போன்றவை அதிகரித்திருப்பதும், இந்த கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.செங்கல் விலை ஒன்று 8ல் இருந்து ---10 ரூபாயாக உயர்ந்துள்ளது. எம் - சாண்ட் 4,500ல் இருந்து 5,500 ரூபாயாகவும், ஜல்லிக்கற்கள் ஒரு யூனிட் 1,000 ரூபாய் வரையும், இரும்பு கம்பி கிலோ 15 ரூபாய் வரையும், சிமென்ட் 50 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.இதுகுறித்து கட்டுமான தொழிலாளர்கள் கூறியதாவது:தங்கத்தைப் போல் கட்டுமான பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தொழில் முடக்கம் ஏற்பட்டு, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.விலை உயர்வு காரணமாக, சதுரடி வீதம் விலை பேசி ஒப்பந்தம் போட்ட வீடுகள், கடைகள், அலுவலகங்கள் உட்பட பல்வேறு கட்டுமான பணிகளையும், தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.எனவே, தமிழக அரசு விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வீடு கட்டுவோர் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.