பாதாள சாக்கடை திட்ட முறைகேடு இணைப்பால்... வருவாய் இழப்பு அபாயம்! ஒப்பந்த நிறுவனத்தின் நேரடி வசூலிப்பால் அதிர்ச்சி
பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வராத நிலையிலும், அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாத சூழலிலும், பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம், குடியிருப்புகளுக்கு முறைகேடாக இணைப்பு வழங்கியிருப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில், 62.82 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், கடந்த 2018ல் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக, 22 வார்டுகளில், 41 கி.மீ.,க்கு, தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் கான்கிரீட் உருளைகள், 'மேன்ஹோல்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நான்கு இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள், பெரியகாவணம் பகுதியில், தினமும் 65 லட்சம் லிட்டர் கழிவுரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கான பணிகள் முடிந்துள்ளன. தற்போது, தெருக்களில் பதிக்கப்பட்ட குழாய்களுடன், குடியிருப்புகளின் கழிவுநீர் குழாய்களை இணைக்கும் பணி நடைபெறுகிறது. நகராட்சிக்கு உட்பட்ட 7,605 குடியிருப்புகளுக்கு, 'இன்டர்னல் பிளம்பிங்' முறையில் இணைப்பு வழங்க, 5.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு வீட்டின் முன், 90 சதுர செ.மீ., அளவில் சிறிய தொட்டி கட்டப்படுகிறது. அதில், குடியிருப்புகளின் கழிவுநீர் வருவதற்காக குழாய் பதிக்கப்பட்டு கட்டுமானம் நடைபெறுகிறது. ஒரு பகுதியில் குடியிருப்புகளின் குழாயும், மற்றொரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாயும் இந்த தொட்டியில் இணைகிறது. நகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை திட்டத்தில் இணையும் குடியிருப்புகளுக்கு முன்வைப்பு தொகை கட்டணம் வசூலித்த பின், தொட்டியில் உள்ள இரு குழாய்களையும் இணைக்கும். அதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. மேற்கண்ட 'இன்டர்னல் பிளம்பிங்' பணிகள் முடிந்த பின், கட்டணம் நிர்ணயிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு முறைகேடாக இணைப்பு வழங்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் கழிவுநீர் விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, திருவள்ளூர் மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், கலெக்டர், நகராட்சி இயக்குநர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில் -கூறப்பட்டு உள்ளதாவது: பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வராத நிலையில், 'இன்டர்னல் பிளம்பிங்' பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம், வீடுகளுக்கு முறைகேடாக நேரடி இணைப்பு வழங்கி வருகிறது. இதற்காக, 1,000 - 30,000 ரூபாய் வரை வசூலித்து வருகிறது. இதற்காக, எந்தவொரு ரசீதும் வழங்கப்படுவதில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், முறைகேடாக இணைப்பு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லாமல் குழாய்களில் தேங்கும். இதனால், சுகாதார பாதிப்புகள், நச்சு வாயு உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது. உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி அதிகாரி கூறியதாவது: சோதனை ஓட்டத்திற்காக ஒரு சில வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திட்டம் செயலுக்கு வரும்போது, அந்த குடியிருப்புகளுக்கு உரிய கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படும். இம்மாதம் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார். முறைகேட்டை தடுக்க வேண்டும் பொன்னேரி நகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயிக்காத நிலையில், முறைகேடாக வழங்கப்பட்டு உள்ள இணைப்புகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பணத்தை கொடுத்து ஏமாறாமல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இணைப்பிற்கான கட்டணம் நிர்ணயித்து முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும். - டி.தனுஷ்கோடி, சமூக ஆர்வலர், பொன்னேரி.