உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலை சீரமைப்பு பணி துவங்கியதோடு சரி 2 மாதங்களாக கிடப்பில் உள்ளதால் சிரமம்

 சாலை சீரமைப்பு பணி துவங்கியதோடு சரி 2 மாதங்களாக கிடப்பில் உள்ளதால் சிரமம்

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் பகுதியில் இருந்து செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் ௨ மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில் இருந்து சிற்றம்பாக்கம், வழியாக செஞ்சிபானம்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையை பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி ரயில் நிலையம் சென்று சென்னை மற்றும் அரக்கோணம் சென்று வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து பல்லாங்குழியாக மாறி மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து பேரம்பாக்கம் முதல் சிற்றம்பாக்கம் வழியாக செஞ்சிபானம்பாக்கம் ரயில் நிலையம் வரை, 6 கோடி ரூபாயில் மூன்று மாதங்களுக்கு முன் சீரமைப்பு பணி துவங்கியது. ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் கடந்த இரு மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருவதோடு இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கலெக்டர் இப்பகுதியில் ஆய்வு செய்து நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ