கிடப்பில் சாலை சீரமைப்பு பணி: கூடப்பாக்கம் மக்கள் சிரமம்
கூடப்பாக்கம்:கூடப்பாக்கம் பகுதியில் ஒன்றிய சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதிவாசிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர். வெள்ளவேடு அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்டது கூடப்பாக்கம் ஊராட்சி. திருமழிசை -- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்து இந்த ஊராட்சிக்கு செல்லும் சாலையை பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை ஐந்து ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி மிகவும் மோசமான நிலையில் இருந்தது.பகுதிவாசிகள் புகாரையடுத்து கடந்த ஜூன் 20ம் தேதி சேதமடைந்த சாலையை ஊராட்சி நிதியில் 21.15 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி மேற்கொண்டனர். இதில் பெயரளவிற்கு ஜல்லி கற்களை கிடப்பில் போட்டனர். தற்போது பெய்த சிறிய மழையில் இந்த சாலை மிகவும் சேமதடைந்து சிறு குளமாக மாறியுள்ளது. இதனால் பகுதிவாசிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர்.எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டுமென கூடப்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.