வடிகால்வாய் அமைக்க சாலைகள் துண்டிப்பு மாற்று பாதையில் தடுமாறும் வாகன ஓட்டிகள்
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் சந்திப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் திசையில், அந்த மேம்பாலம் துவங்கும் இடம், மழை வெள்ளம் கடந்து செல்லும் பகுதி. அப்பகுதியில், சிப்காட் வளாகத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து கும்மிடிப்பூண்டி தாமரை ஏரிக்கு, மழைநீர் வடிந்து செல்லும். மழைநீர் சீராக வடிந்து செல்ல வழியின்றி, ஒவ்வொரு மழைக்காலங்களிலும் அப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில், நான்கு அடி உயரத்திற்கு, மழை வெள்ளம் தேங்கி நிற்கும். அந்த சமயங்களில் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும். இந்நிலையில், அங்கு வடிகால்வாய் அகலமாக அமைத்து சீராக மழை வெள்ளம் வடிந்து செல்ல, திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக ஒரு வார காலத்திற்கு முன், அப்பகுதியில் உள்ள இரு இணைப்பு சாலைகளிலும், 15 அகலத்திற்கு பள்ளம் எடுத்து, புதிய வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்பாராத விதமாக கனமழை பெய்ய துவங்கியதால், தற்போது பணிகள் முடங்கின. அந்த இணைப்பு சாலையில், தற்காலிக மாற்று பாதை அமைக்கப்பட்டிருந்தது. சவுடு மண் நிரப்பப்பட்ட மாற்றுப் பாதை, தற்போது மழையால் சகதியாக மாறியுள்ளது. அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். சற்று அசந்தால் கூட, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மோதி, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தற்காலிக மாற்று பாதையை தரமாகவும், பாதுகாப்பாகவும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.