பீர் தொழிற்சாலையில் கொள்ளை கிரேன் உதவியுடன் இயந்திரம் திருட்டு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பில்லாக்குப்பம் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் 'பீர்' தொழிற்சாலை, ஆறு ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. தற்போது, வங்கி கட்டுப்பாட்டில் அந்த தொழிற்சாலை உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆறு பேர் மர்ம கும்பல் முகத்தை மறைத்தபடி, இரும்பு கம்பிகளுடன் சுவர் ஏறி குதித்து தொழிற்சாலைக்குள் நுழைந்தனர். தொழிற்சாலையில் காவலுக்கு இருந்த பில்லாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ராஜு, 62, சேஷய்யா, 60, எல்லையா, 55, ஆகியோரை சுற்றிவளைத்து, தனி அறையில் அடைத்தனர்.பின், நுழைவாயில் கேட்டை திறந்த மர்ம நபர்கள், ஏற்கனவே தொழிற்சாலைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த, பொக்லைன், கிரேன் மற்றும் லாரியை உள்ளே கொண்டு வந்தனர். தொழிற்சாலைக்குள் இயந்திரங்கள் இருந்த கட்டடத்தின் சுவரை ஜே.சி.பி., வாயிலாக இடித்தனர்.வெல்டிங் கட்டர் கொண்டு தொழிற்சாலைக்குள் இருந்த, 'ஸ்டெயின்லஸ் ஸ்டீல்' இயந்திரத்தை அகற்றினர். கிரேன் வாயிலாக இயந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர்.இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால், கும்மிடிப்பூண்டி பகுதி தொழிற்சாலை நிர்வாகத்தினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.