தண்டையார்பேட்டையில் ரவுடி வெட்டிக் கொலை
தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்மொழி, 31. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர் தெரு அருகே நேற்று மதியம் பைக்கில் வந்த இவரை, மூவர் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி தப்பியது. இதில் அருண்மொழி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். காசிமேடு போலீசார் அருண்மொழியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிரிழந்தார். காசிமேடு போலீசாரின் விசாரணையில், சொத்து பிரச்னையால் உறவினரே கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட அருண்மொழியை, 'குதிரை' வெங்கடேசன் என்பவர், தத்தெடுத்து வளர்த்துள்ளார். 'குதிரை' வெங்கடேசனின் தம்பி மகன் ரூபன், 31. சொத்து பிரச்னை தொடர்பாக, ரூபனுக்கும் அருண்மொழிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட தகராறின்போது, அருண்மொழி, ரூபனை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபன், தன் நண்பர்களான செந்தில்குமார், கமல் ஆகியோருடன் சேர்த்து, அருண்மொழியை கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். சம்பவத்தில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை, விநாயகபுரம் 7வது தெருவைச் சேர்ந்த ரூபன், 31, வடபெரும்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார், 31, கமல், 23, ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.