உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாஸ்மாக் சுவரை துளையிட்டு திருட்டு 1.60 லட்சம் ரூபாய் தப்பியது

டாஸ்மாக் சுவரை துளையிட்டு திருட்டு 1.60 லட்சம் ரூபாய் தப்பியது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் சுவரை துளையிட்டு திருட முயன்ற மர்ம நபர்கள், இரும்பு பெட்டகத்தை உடைக்க முடியாத சோகத்தில், மது அருந்திவிட்டு சென்றனர். இதில், பெட்டகத்தில் இருந்த, 1.60 லட்சம் ரூபாய் விற்பனை பணம் தப்பியது. கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு விற்பனை தொகையான, 1.60 லட்சம் ரூபாயை, கடையில் உள்ள இரும்பு பெட்டகத்தில் வைத்த மேற்பார்வையாளர் சகாயகுமார், கடையை பூட்டி சென்றார். நள்ளிரவில், டாஸ்மாக் கடைக்கு வந்த மர்ம நபர்கள், கடையை சுற்றி இரும்பு தடுப்பு அமைத்திருப்பதை கண்டனர். டாஸ்மாக் கடையை ஒட்டி காலியாக உள்ள மற்றொரு கடையின் பின்புற சுவரை, இயந்திரம் மூலம் துளையிட்டு உள்ளே சென்றனர். அந்த கடைக்கும், டாஸ்மாக் கடைக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவரை துளையிட்டு மதுக்கடைக்குள் சென்றனர். கடைக்குள் பதிக்கப்பட்டிருந்த, 500 கிலோ இரும்பு பெட்டகத்தை பெயர்த்து எடுத்து கவிழ்த்தனர். பெட்டகத்தின் பின்புறத்தை பெயர்த்து எடுக்க முயன்றனர். நீண்ட நேரமாகியும் உடைக்க முடியாததால், சோகத்தில் அங்கேயே அமர்ந்து மது அருந்தினர். மேலும், கடையில் இருந்த 'சிசிடிவி' கேமராவை உடைத்து, வீடியோ பதிவுகள் அடங்கிய டி.வி.ஆர்.,ஐ எடுத்து சென்றனர். பெட்டகத்தை உடைக்க முடியாமல் போனதால், விற்பனை தொகையான, 1.60 லட்சம் ரூபாய் தப்பியது. இந்த டாஸ்மாக் கடையில், நான்காவது முறையாக சுவரை துளையிட்டு திருட்டு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மேற்பார்வையாளர் அளித்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை