மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்
திருவள்ளூர்:'தாட்கோ' வாயிலாக, நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் இடம் வாங்க 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் 'தாட்கோ' வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் இடம் வாங்க, 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர், விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம்.விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர், 'தாட்கோ' திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்க குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். வயது வரம்பு 18 - 55. நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பயனாளிகள் newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.