குப்பையை தரம் பிரிக்காமல் வழங்குபவர்களுக்கு அபராதம் ஊரக வளர்ச்சித்துறை அதிரடி முடிவு
கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்துார், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, பூண்டி, திருத்தணி உட்பட 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.இதில், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியம் வானகரம் ஆகிய இரு ஊராட்சிகளில், முதல்கட்டமாக மட்கும், மட்காத குப்பை என தரம்பிரித்து, தங்கள் பகுதிக்கு வரும் துாய்மை பணியாளர்களிடம் பகுதிவாசிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டுமென, வீடு வீடாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு கொடுக்காதவர்களுக்கு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 விதி 110ன் கீழ், 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்து, துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். எனவே, வெங்கத்துார், வானகரம் ஊராட்சி பகுதிவாசிகள் மற்றும் வணிக நிறுவனத்தினர், துாய்மை பணியாளர்களிடம் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டுமென, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும், விரைவில் 526 ஊராட்சிகளிலும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.