பருவமழை முன்னெச்சரிக்கை தயாராகும் மணல் மூட்டைகள்
பள்ளிப்பட்டு:வடகிழக்கு பருவ மழையின் போது வெள்ள பாதிப்புபை எதிர்கொள்ளும் விதமாக, நீர்வளத்துறை சார்பில் மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது, ஆற்றங்கரையோர கிராமங்கள், வெள்ளத்தின் சீற்றத்தில் சிக்கி தவிக்கின்றன. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தேவலாம்பாபுரம், வி.பி.ஆர்.புரம் உள்ளிட்ட கிராமங்களிலும், பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை, கீழப்பூடி உள்ளிட்ட கிராமங்களிலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற வெள்ள பாதிப்புகளின் போது, குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகாமல் தடுக்கவும், ஏரிகளின் கரைகள் உடைந்து விடாமல் பலப்படுத்தவும் மணல் மூட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. வட கிழக்கு பருவமழை துவங்கும் முன், தற்போது பள்ளிப்பட்டு நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இந்த மணல் மூட்டைகள் பயன்படுத்திக்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.