உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கடல் ஆமைகள் முட்டையிடும் பருவம் துவக்கம்

 கடல் ஆமைகள் முட்டையிடும் பருவம் துவக்கம்

பழவேற்காடு: கடல் ஆமைகள் கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு செல்லும் பருவம் துவங்கி உள்ளதால், மீ னவர்கள் மற்றும் சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். வங்காள விரிகுடா கடல் பகுதியை ஒட்டி பழவேற்காடு மீனவப்பகுதி உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதிகளில், டிசம்பர் - ஏப்ரல் மாதங்களில், 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைகள், முட்டையிட்டு செல்வது வழக்கம். இந்தவகை ஆமைகள் இந்திய வன உயிரின சட்டம் -1972ன் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினமாக இருக்கிறது. இரவு நேரங்களில் மட்டும் கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிடும் ஆமைகளின் நடவடிக்கைகள் வனத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் - ஏப்ரல் மாதம் வரை, 14,704 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து குஞ்சு பொறித்தபின், கடலில் பாதுகாப்பாக விடப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு கடல் ஆமைகள் கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிடும் பருவம் துவங்கி உள்ளது. தற்போது வனத்துறையினர் கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு சுற்றுசூழல் பாதிப்புகளாலும், மீன்பிடி வலைகளில் சிக்கியும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 30க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. அதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க, மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர், பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க வேண் டு ம். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் கடற்கரை பகுதிகளில் வீசி செல்லாமல் அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். அதேபோன்று மீனவர்களும், பயன்பாடு இல்லாத மீன்பிடி வலைகளை கடலில் துாக்கி எறிவதை தவிர்க்க வேண் டும். இது தொடர்பாக வனத்துறை, மீன்வளம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து, மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணி யரிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை