அரசு மருத்துவக்கல்லுாரி முன் குளம் போல் தேங்கிய கழிவுநீர்
திருவள்ளூர், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி முன் முறையாக கால்வாய் அமைக்காததால், குளம் போல் கழிவுநீர் தேங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவ கல்லுாரி வழியாக எஸ்.பி., அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், வேலைவாய்ப்பு அலுவலகம், முதன்மை கல்லுாரி அலுவலகம் ஆகிய அரசு துறை அலுவலகங்களுக்கு, அரசு ஊழியர் மற்றும் மக்கள் சென்று வருகின்றனர்.மருத்துவ கல்லுாரி சாலை முன், வேலைவாய்ப்பு அலுவலகம் ஒட்டி கழிவுநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், கழிவுநீர் சாலையோரம் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும், கொசு உற்பத்தியாகி, கல்லுாரியில் பயிலும் மாணவ - மாணவியர், மருத்துவர்கள் மற்றும் அருகில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கியதால் சாலையும் சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளது.எனவே, கல்லுாரி வளாகத்தை ஆய்வு செய்து, அங்கு கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.