உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகள் தாமதம்

கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகள் தாமதம்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், 10.48 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் நவீன சுத்திகரிப்பு மைய பணி, மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்ட காலத்திற்குள் பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சியில், கழிவுநீர் திட்ட பணிக்காக, 86.97 கி.மீ.,க்கு குழாய் பதிக்கப்பட்டு, நகரின் நான்கு இடங்களில் கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து, தேவி மீனாட்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர், புட்லுார் ஏரியில் நேரடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள இயந்திரம் பழுதடைந்ததால், புட்லுார் ஏரியில் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், புட்லுார் ஏரி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. புட்லுார் - திருவள்ளூர் இடையில் ரயிலில் பயணம் செய்வோரும், ஏரியில் இருந்து எழும் துர்நாற்றத்தால் கடும் அவதிப்படுகின்றனர். சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவுநீரை, சுத்தமான குடிநீராக மாற்றி, கூவம் ஆற்றில் விடும் வகையில், 10.48 கோடி ரூபாய் மதிப்பில், நவீன சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி, 2023ம் ஆண்டு துவங்கியது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணி முடங்கியதால், ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு, மறு ஒப்பந்தம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் முதல், மீண்டும் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அருகில், புதிதாக மண்ணுயிரி தொழில்நுட்பத்தில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, நுண்ணுயிரிகள் மற்றும் கழிவு நீரில் உள்ள கரிம மாசுக்கள் நீக்கப்படும். அதன்பின், நன்னீராக புட்லுார் ஏரியில் விடப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்திய நிலையில், தற்போது மழை காரணமாக, கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திட்ட காலத்திற்குள், நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி