உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைநீர் கால்வாய் பணி மந்தம் வி.எம்., நகர் மக்கள் கடும் அவதி

மழைநீர் கால்வாய் பணி மந்தம் வி.எம்., நகர் மக்கள் கடும் அவதி

திருவள்ளூர் வி.எம்., நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தமாக நடப்பதால், பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வி.எம்., நகர், ஜெ.ஜெ., சாலை பகுதியில், 600க்கும் மேற்பட்ட வீடுகளில், 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். காக்களூர் ஊராட்சி மற்றும் திருவள்ளூர் நகராட்சி பகுதிகள் அருகருகே அமைந்துள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட ஜெயின் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், நீர்வளத் துறை கால்வாய் வழியாக, காக்களூர் ஏரியை சென்றடைகிறது. இதற்கு முன், மழைநீர் வெளியேற வழியின்றி ஜெயின் நகர், வி.எம்., நகர், ஜெ.ஜெ., சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியதால், மக்கள் கடும் அவதிப்பட்டனர். வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மழைநீர் தேங்காத வகையில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், இப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. சாலை நடுவே சிறுபாலம் கட்டப்பட்டு, சாலையின் ஒரு பகுதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால், கால்வாய் தடுப்பு அமைக்கும் பணி தற்போது வரை துவங்கவில்லை. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் மாணவ - மாணவியர் மற்றும் பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கால்வாய் பணியை மழைக்காலம் துவங்குவதற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை