திருமழிசையில் புகையில்லா போகி விழிப்புணர்வு
திருமழிசை:பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக, 'பழையன கழிதலும், புதியன புகுதலுமாக' கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில் தமிழர்கள், தை திருமகளை வரவேற்கும் முகமாக, தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பது வழக்கம்.இப்போகிப் பண்டிகை காலப் போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது. போகியன்று தங்களிடம் உள்ள டயர், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரித்து வருகின்றனர்.இதனால், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு,கந்தக டைஆக்ஸைடு, டையாக்சின், மற்றும் நச்சுத் துகள்களால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.இதன் வாயிலாக கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நல குறைவு ஏற்படுகின்றன.இதை தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில், போகி திருநாளில், பழைய பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம் என, மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்இதையடுத்து, திருமழிசை பேரூராட்சியில் நேற்று, துப்புரவு பணியாளர்கள் கைகளில் பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பழைய டயர்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உடல்நல பிரச்னைகள் குறித்து பகுதிவாசிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.