பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு முகாமில் துாய்மை பணியாளரை கடித்த பாம்பு
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து மாவட்டம் முழுதும் நேற்று, பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் முகாம்கள் நடத்தினர்.கும்மிடிப்பூண்டியில், தாமரை ஏரியை துாய்மைப்படுத்தும் பணிகள் நேற்று நடந்தன. பேரூராட்சி தலைவர் ஷகிலா தலைமையில் நடந்த முகாமில், 80 துாய்மை பணியாளர்கள் ஒன்றிணைந்து ஏரியில் குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவை அகற்றி அப்புறப்படுத்தினர்.புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி சார்பில் அங்குள்ள பாலீஸ்வரர் கோவில் பகுதியில், துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அமுலு, 35, என்ற துாய்மை பணியாளரின் காலில் பாம்பு கடித்தது.கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.துாய்மை பணியாளர்களுக்கு கையுறையுடன், காலில் அணிய பாதுகாப்பு ஷூக்களும் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.