திருத்தணி அரசு மருத்துவமனை முன் தேங்கி நிற்கும் மழைநீர்
திருத்தணி:திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் வட்டார அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 150க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேறுவதற்கு கால்வாய் வசதியில்லாததால் சாலை மற்றும் மருத்துவமனையின் முன் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோயாளிகள் மற்றும் மக்கள் சிரமப்படுகின்றனர். அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் மருத்துவமனையின் முன் கால்வாய் வசதி ஏற்படுத்தி தண்ணீர் தேங்கி நிற்காத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என, நகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.