கலெக்டர் அலுவலக பூங்கா சீரமைக்க நடவடிக்கை
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பூங்காவினை சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.திருவள்ளுர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கடந்த, 10 ஆண்டுக்கு முன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது அந்த பூங்காவில் செடிகள் வளர்ந்து, புதராக காட்சியளிக்கிறது. இதனால், கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் விளையாட இயலாமல், அவதிப்படுகின்றனர். மேலும், பொதுமக்களும் பூங்காவினை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.இந்த நிலையில், கலெக்டர் பிரதாப் பராமரிப்பில்லாத பூங்காவை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, 'பூங்காவை சிறப்பான முறையில் புதுப்பித்து பொதுமக்கள், சிறுவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வந்து படிப்பதற்கேற்ப உகந்த சூழ்நிலை உருவாக்க வேண்டும். சோலை அடர்வனத்தையும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிப்பதற்கேற்ப உகந்த சூழ்நிலை உருவாக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின், 5 கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டும் பணியை பார்வையிட்டு, விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.