சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள் சென்னையில் மீண்டும் அதிர்ச்சி
பூந்தமல்லி: பூந்தமல்லியில் தெருவில் நடந்து சென்ற சிறுமியை, தாயின் கண்முன்னே இரண்டு தெரு நாய்கள் துரத்தி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நகராட்சி 13வது வார்டு, மகாலட்சுமி நகரைச் சேர்ந்த யாஸ்மின் அவரது மகள் சமீரா, 9. அதே பகுதியில் நடந்து சென்றபோது, சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு தெரு நாய்கள், தாய் கண்முன்னே சிறுமி சமீராவை துரத்தியது. நாயிடம் இருந்து தன் மகளை காப்பாற்ற யாஸ்மின் போராடிய நிலையில், சிறுமியை நாய்கள் விரட்டி விரட்டி தலை, கை, கால்களில் கடித்தது. தடுத்த தாய் யாஸ்மினையும் நாய்கள் கடித்தன. நாய்க்கடியால் காயமடைந்த சிறுமி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் 'பூந்தமல்லி நகராட்சி மகாலட்சுமி நகரில் சமீபமாக, 10க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்துள்ளன. சாலையில் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. நாய்களை பிடித்து செல்ல பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர். சென்னையில் நாய்களால் மக்கள் பாதிக்கப்படுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இருநாட்களுக்கு முன் ஒரு சிறுவன், சிறுமி மற்றும் மூதாட்டியை நாய்கள் கடித்து குதறின. இப்பிரச்னையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளையும் வெளியிட்டது. இருப்பினும் தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.