தெரு குழாய் சேதம்: சாலையில் ஆறாக பெருக்கெடுத்த குடிநீர்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில், தெரு குழாய் சேதம் அடைந்து வெளியேறும் குடிநீர், சாலையில் பெருக்கெடுத்து ஆறாக ஓடி வீணாகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறு மூலம், ஐந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேகரித்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், இங்குள்ள, 100க்கும் மேற்பட்ட தெருக்களில், ஆங்காங்கே தெரு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவை பல நாட்களாக உடைந்து கிடக்கின்றன. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், சேதம் அடைந்த குழாய்கள் மாற்றப்படவில்லை. அதனால், குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று, நாகலாபுரம் சாலையில் உள்ள ஒரு தெரு குழாய் சேதம் அடைந்து வெளியேறிய தண்ணீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சமீபத்தில், இதே சாலையில் வேறு ஒரு இடத்தில், குழாய் சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. எனவே, பேரூராட்சி ஊழியர்கள் முறையாக கண்காணித்து, சேதமான குழாய்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.