பஸ் பிடிக்க ஓடிய மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம், தடா அருகே உள்ள காரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தா, 16. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து, நண்பர்களுடன் பள்ளியில் இருந்து வெளியே வந்தார். எளாவூர் பஜாரில், சற்று தொலைவில் ஆரம்பாக்கம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.அந்த பேருந்தை பிடிப்பதற்காக, அனைத்து மாணவர்களும் ஓடினர். அப்போது, மாணவன் நந்தா மயங்கி கீழே விழுந்து, நெற்றியில் காயம் ஏற்பட்டது.அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், எளாவூர் சோதனைச்சாவடியில் உள்ள 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், மாணவன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.