ஆதார் அப்டேட்டிற்காக மாணவர்கள் தவிப்பு சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு
திருவள்ளூர்: ஐந்து மற்றும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆதார் 'அப்டேட்' செய்வதற்காக இ -- சேவை மையங்களில் குவிந்து வருகின்றனர். பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஆதார் அடையாள எண் பெற்ற ஒவ்வொருவரும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்கள், புகைப்படம், கைரேகை, கருவிழி ஆகியவற்றை, 'அப்டேட்' செய்ய வேண்டும். ஐந்து வயது மற்றும் 15 வயது நிறைவடைந்தோரும், தங்கள் ஆதார அடையாளத்தை 'அப்டேட்' செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் என்பதால், ஆதார் 'அப்டேட்' செய்வதற்காக, ஆதார் மற்றும் இ -சேவை மையங்களில் குவிந்து வருகின்றனர். இதற்காக பள்ளியில் விடுப்பு எடுத்து, பெற்றோருடன் ஆதார் சேவை மையத்திற்கு வருகின்றனர். மேலும், வங்கிகள், இ-சேவை மையத்திலும், மாணவ, மாணவியர் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிப்பதுடன், பெற்றோருக்கும் கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, பள்ளிகளிலேயே சிறப்பு ஆதார் சேவை மையம் நடத்தி, அங்கேயே மாணவ, மாணவியரின் கூடுதல் விபரங்களை, பதிவு செய்தால், அவர்களின் கல்வி பாதிக்காது. எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளிகளிலேயே மாணவ, மாணவியிரின் ஆதார் விபரங்களை 'அப்டேட்' செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.