பள்ளி எதிரே புதிய பாலம் மாணவர்கள் அச்சம்
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு மேற்கில், ஆந்திர மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, திருவள்ளூர் மாவட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து உள்ளது.பாலசமுத்திரம் பெரிய ஏரியில் இருந்து அம்மையார்குப்பம் மற்றும் ராகவநாயுடுகுப்பம் வழியாக ஆறுகள் செல்கின்றன. ராகவநாயுடுகுப்பம் அரசு நடுநிலை பள்ளி அருகே பாயும் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தரைப்பாலம், மழைக்காலத்தின் போது வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த தரைப்பாலத்திற்கு மாற்றாக மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக, தற்போது போக்குவரத்து நடந்து வருகிறது. அரசு நடுநிலை பள்ளியின் எதிரே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை ஒட்டி இணைப்பு சாலையும், கிராமத்தின் தெற்கு பகுதிக்கு செல்லும் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளியின் நுழைவாயிலை ஒட்டியே இச்சாலைகள் செல்வதால், பள்ளி மாணவர்கள், வாகனங்கள் எந்த சாலை வழியாக செல்கின்றன என்பதை யூகிக்க முடியாமல் குழப்பம் அடைகின்றனர்.எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளி நுழைவாயில் எதிரே உள்ள சாலையில், மைய தடுப்பு அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.