பணியிடமாற்றம் பெற்ற தலைமையாசிரியர் மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
கடம்பத்துார், பணியிடமாற்றம் பெற்று சென்ற அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியரை, மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சி கொம்மதாங்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 2010 ஜூன் மாதம் முதல் ஜமீலா, 56, என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு கொரோனா காலத்தில் குறைவான பள்ளி மாணவர்கள் உள்ள பள்ளியை மூடுவதற்கு, தமிழக அரசு வெளியிட்ட பட்டியலில், கொம்மதாங்கல் துவக்கப்பள்ளி பெயரும் இடம் பெற்றது. இதையடுத்து, தலைமையாசிரியர் ஜமீலா, பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, ஆங்கில கல்வியை கொண்டு வந்தார். தற்போது, இப்பள்ளியில் 35 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி சொந்த விருப்பத்தின் பேரில், கவுன்சிலிங் மூலம் இருளஞ்சேரி அரசு துவக்கப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது பள்ளியில் தலைமையாசிரியர் இல்லாமல், 35 மாணவர்களுக்கு, ஒரேயொரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை, மாணவர்கள் மற்றும் பெற்றோர், 'பணியிடமாற்றம் பெற்ற தலைமையாசிரியர், மீண்டும் இப்பள்ளிக்கு திரும்ப வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடம்பத்துார் வட்டார கல்வி அலுவலர் மற்றும் மப்பேடு போலீசார், 'இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.