மாணவர்கள் திறமையை வளர்த்து வேலை தருபவராக மாறணும் சைலேந்திரபாபு பேச்சு
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - திருத்தணி நெடுஞ்சாலையில், கிருஷ்ணா நகரில் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் கிருஷ்ணா கல்வி குழுமத்தின் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்வி குழுமத்தின் செயலர் டி.எஸ்.ரவிகுமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் அருண்பிரசாத் வரவேற்றார். இதில், தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று, 520 பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.அதன்பின் அவர் பேசியதாவது:மாணவர்கள் பொறியியல் படிப்பு முடித்தால், உலகளவில் வேலை வாய்ப்புகள் பெறலாம். போட்டி தேர்வு எழுதி உயர்ந்த பதவியில் இருக்கலாம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கடினமாக உழையுங்கள். மாணவர்கள் வேலை தேடி அலையாதீர்கள். பிறருக்கு வேலை கொடுத்து மனிதனாக மாறுங்கள். மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்ந்து கொண்டால் நினைத்த பதவிகள், தொழில்கள் துவங்கி, வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் அடையலாம். நம்பிக்கையுடன் போட்டி தேர்வுகளை எழுதினால், அரசு வேலை எளிதாக கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மேலாளர் குமார், சுரேஷ் உட்பட துறை தலைவர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றார். கல்லுாரி டீன் கற்பகவல்லி நன்றி கூறினார்.