உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலம்

 ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், வகுப்பறை கட்டடங்கள் பற்றாக்குறையாக உள்ளதால், மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடம் படிக்கும் அவல நிலை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, 1966ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இங்கு பாலவாக்கம், லட்சிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற் பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில் உள்ள பழைய கட்டடத்தில் இரண்டு வகுப்பறைகள் உள்ளன. அங்கிருந்து, 200 மீட்டர் துாரமுள்ள மற்றொரு இடத்தில், ஐந்து வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. வகுப்பறை கட்டடங்கள் பற்றாக்குறையால், மாணவ- - மாணவியர் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதே போல் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 1999ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 700க்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர். இங்கு 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. வகுப்பறை பற்றாக்குறையால், மாணவியர் பாடம் கற்க மைதானத்தில் அமரும் நிலை உள்ளது. தமிழக அரசு கல்வி, சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறும் நிலையில், ஊத்துக்கோட்டை, பாலவாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, போதுமான அளவு வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் என, பெற்றோரிடம் கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 65 பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டடங்கள் தேவைப்படுகின்றன. அடுத்த கல்வி ஆண்டில் நபார்டு திட்டத்தின் வாயிலாக நிதி பெறப்பட்டு தேவையான வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும். - கற்பகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ