கட்டட வசதி இல்லாமல் மாணவியர் கடும் அவதி
ஊத்துக்கோட்டை: அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 1999ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆறு முதல் பிளஸ் 2 வரை, 700க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு, தலைமை ஆசிரியர் உட்பட 21 ஆசிரியர்கள், எட்டு தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இது போதுமானதாக இல்லை. இதனால், மாணவியர் பாடம் கற்க, தேர்வுகள் எழுத மைதானத்தில் அமரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது என, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர். ஆனால், ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாத நிலையே நீடிக்கிறது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், ஊத்துக் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.