திருவேற்காடில் சுகாதார நிலையம் திடீர் மூடல் காடுவெட்டி பகுதி கர்ப்பிணியர், நோயாளிகள் தவிப்பு
திருவேற்காடு: திருவேற்காடு, காடுவெட்டி பகுதியில் 58 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திடீரென நேற்று மூடப்பட்டு, புலியம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதை அறியாமல், மருந்து மாத்திரை வாங்க வந்த நோயாளிகள், கர்ப்பிணியர் தவிப்பிற்குள்ளாகினர். திருவேற்காடு, காடுவெட்டி, வீரராகவபுரம் பகுதியில், 1967ல் அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டப்பட்டது. 2013ல் விரிவாக்கம் செய்யப்பட்டு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்தது. ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருந்ததால், ஏழை, எளிய மக்கள் அரசு பேருந்தில் எளிதில் வந்து சென்றனர். இதையடுத்து சுகாதார நிலையத்தை, தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த, 2023ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, காடுவெட்டி பகுதியில் 58 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சுகாதார நிலையத்தை பூட்டி, தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த திருவேற்காடு, புலியம்பேடு பகுதியில் இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தவகையில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் புலியம்பேடில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலையம் நேற்று முதல் புலியம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக 'நோட்டீஸ்'சும் ஒட்டப்பட்டது. இதையறியாமல், மருந்து மாத்திரைகள் வாங்க ஏராளமானோர் வந்தனர். இடமாற்றம் செய்யப்பட்ட தகவல் அறிந்து, வேதனையும் அதிருப்தியும் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர், செவிலியர் மற்றும் போலீசார், சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து, சிறிது நேரத்தில் சுகாதார நிலையத்தை மூடி சென்றனர். இதனால், சுற்றுவட்டார பகுதிமக்கள் தவிப்பிற்கு உள்ளாகினர். முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? சர்க்கரை, ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரை வாங்க வந்தேன். காலை 7:00 மணி முதல் காத்திருக்கிறேன். திடீரென சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். திருவேற்காடு நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும்மேல் மக்கள் தொகை உள்ளது. எனவே, காடுவெட்டி மற்றும் புலியம்பேடு என, இரண்டு சுகாதார நிலையங்களும் செயல்பட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் தான் முதல்வருக்கு ஓட்டு போட்டோம். இப்போது மருத்துவமனையே மூடப்பட்டுள்ளது. - ஜமுனா, 60, திருவேற்காடு.
புலியம்பேடு தான் அரசு ஒதுக்கிய இடம்
தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, வீரராகவபுரம், காடுவெட்டி அரசு துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர் மற்றும் இதர பணியாளர்கள், புலியம்பேடு பகுதியில் முதல்வரால் புதிதாக திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவின்படி, அங்கு பணி புரிகின்றனர். இதில், மருத்துவர்களோ, இதர பணியாளர்களோ தன்னிச்சையாக செயல்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம் என, மருத்துவ அலுவலரால் 'நோட்டீஸ்' ஒட்டப் பட்டுள்ளது.